முக்கிய செய்திகள்:
நக்மா உள்ளிட்ட பல காங். தலைவர்கள் கைது

உத்திரப் பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மொரதாபாத்தில் பா.ஜ.க போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதே இடத்தில் காங்கிரஸ் கட்சியினரும் அமைதிப் பேரணி நடத்த முற்பட்டதை அடுத்து, அங்கு திரண்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மதுசூதனன் மிஸ்த்திரி, நக்மா, அம்மாநில காங்கிரஸ்த் தலைவர் நிர்மல் கத்தாரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் எங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.இதே போல, சஹரன்பூர் நகரில் உள்ள குருத்வாரா சாலையில் ஒரு வழிபாட்டுத் தலம் அருகே கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதை அடுத்து, அங்கு கலவரம் வெடித்தது.

இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நேரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தையும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

பல கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. மேலும், இதனை பயன்படுத்திக்கொண்டு 12-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சிலர் கொள்ளையடித்து சென்றனர்.கலவரப் பகுதிக்கு உடனடியாக போலீஸார் விரைந்து, கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலவரத்தில் ஈடுப்பட்டனர். இதில் இரு தரப்பிலும் 2 பேர் பலியாகினர்.

மேலும், இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

மொராதாபாத் மற்றும் சஹரன்பூர் ஆகிய பகுதிகளில் பதற்ற நிலை நீடிப்பதை அடுத்து, அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுக்க உள்துறைக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இரு மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்ட நிலையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உத்திரபிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்