முக்கிய செய்திகள்:
புதுவை கவர்னர் உருவப்படத்தின் மீது சாணி–அழுகிய முட்டை வீச்சு

புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியாவுக்கும், முதல்–அமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததையடுத்து கவர்னரை மாற்றுவதற்கு முதல்–அமைச்சர் ரங்கசாமி முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி கவர்னர் வீரேந்திர கட்டாரியா நீக்கப்பட்டார். அவர் நாளை புதுவையில் இருந்து விடைபெற்று செல்கிறார்.இதற்கிடையே நேற்று கவர்னர் வீரேந்திர கட்டாரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் புதுவை அரசு பற்றி கடுமையான விமர்சித்தார். புதுவை அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், அதற்கு உடந்தையாக செயல்படாததால் என்னை முதல்–அமைச்சர் நீக்குவதற்கு முயற்சித்தார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னர் குறை கூறியது என்.ஆர். காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.இதனால் அவர்கள் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இன்று காலை 100–க்கும் மேற்பட்ட என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர்.

அவர்களை தபால் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு கவர்னர் உருவப்படம் ஒன்றை வைத்து அதன் மீது சாணி, அழுகிய முட்டை மற்றும் அழுகிய தக்காளி ஆகியவற்றை வீசினார்கள். செருப்பாலும் அடித்தார்கள். உடனே போலீசார் அதை தடுக்க முயன்றனர்.இதனால் போலீசாருக்கும், என்.ஆர். காங்கிரசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இறுதியில் போலீசார் வீரேந்திர காட்டாரியா படத்தை அங்கிருந்து பறித்து சென்றனர்.

மேலும் செய்திகள்