முக்கிய செய்திகள்:
எரிவாயு குழாய் வெடிப்பு : சிரஞ்சீவி ஆறுதல்

கடந்த 27-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் நகரம் கிராமத்தில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீப்பிடித்தது. சுமார் 40 மீட்டர் உயரத்துக்கு பற்றி எரிந்த தீயில் 10 ஏக்கர் பரப்பிலான இடம் கருகி சாம்பலானது. பல வீடுகள், தென்னை மரங்கள், ஆடு–மாடு, கோழி, வாத்துகள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் எரிந்து போனதால் அந்த இடம் சுடுகாடு போல் காட்சி அளிக்கிறது.

இந்த விபத்தில் 19 பேர் பலியானார்கள். 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அமலாபுரம், ரகோலி, ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தால் பாதிக்கப்பட்ட நகரம் கிராமவாசிகளை நேற்று சென்று பார்த்த நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் அமலாபுரம், காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரி ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அவர்களின் உடல்நலத்தை விசாரித்தறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரஞ்சீவி காயமடைந்தவர்கள் அனைவரும் குணமடைந்து, தங்களது வேலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால் மாநில அரசு அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கியாஸ் குழாய் செல்லும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கெயில் நிறுவனம் செய்யாததே இந்த விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டிய சிரஞ்சீவி, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இவ்விவகாரத்தை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்