முக்கிய செய்திகள்:
பெரியாறு அணை விவகாரம் : கேரளா மறு சீராய்வு மனுதாக்கல்

தென்தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அணை பலவீனமாக இருப்பதாகவும், அங்கு புதிய அணை கட்ட வேண்டுமெனவும் கூறி வந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அங்கு 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கலாம் என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி பி.ஜே. ஜோசப் மற்றும் கேரள அரசு வக்கீல்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மறு சீராய்வு மனுவில் என்னென்ன காரணங்களை குறிப்பிடுவது என்றும், அவர்கள் ஆலோசித்தனர். இது தொடர்பாக மந்திரி பி.ஜே. ஜோசப் கூறியதாவது:–

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரள அரசின் குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ள வில்லை. அணையில் நீர் மட்டத்தை உயர்த்தினால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்படும். மேலும் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து ஏற்படும். பல ஏக்கர் வனப்பகுதி நீருக்குள் மூழ்கும்.

இதனால் வன விலங்குகளும் பாதிக்கப்படும். மறு சீராய்வு மனுவில் இக்கருத்துக்களை வலியுறுத்துவோம். மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்காக போடப்பட்ட 999 வருட கால ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்துவோம்.

இந்த ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் 1886–ம் ஆண்டு போடப்பட்டுள்ளது. அப்போது சென்னை மாகாணத்துடன்தான் கேரள இருந்தது. எனவே திருவிதாங்கூர் மன்னரும் சென்னை மாகாண செயலாளரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டுள்ளனர்.

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு செய்யப்பட்ட எந்த ஒப்பந்தமும் செல்லாது. அதன்படி தமிழ்நாட்டுடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தமும் செல்லாது என கோர்ட்டில் வாதிடுவோம். இப்பிரச்சினையில் ஜனாதிபதி தலையீட்டு தீர்வு காணவும் நாங்கள் வலியுறுத்துவோம். மறுசீராய்வு மனுவை வருகிற 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்