முக்கிய செய்திகள்:
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் பலி

டெல்லியிலிருந்து திப்ருகரை நோக்கி புறப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், பீகார் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில்,  பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து திப்ருகரை நோக்கி புறப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், பீகார் மாநிலம், சாப்ரா அருகே கோல்டன்கஞ்ச் என்ற இடத்தில் தடம் புரண்டது. அதன் 11 பெட்டிகள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்த மருத்துவ குழுவினர், மேல் சிகிச்சை தேவைப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் சாப்ரா, லக்னோ, அஜ்பூர், கெளஹாத்தி உள்ளிட்ட இடங்களில் உதவி மையங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. இதனிடையே, விபத்துநேரிட்ட இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தாரியாபூர் என்ற இடத்தில் மூன்று டைமர் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ரயில் விபத்து, நாசவேலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்