முக்கிய செய்திகள்:
ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.

புதிய அரசு பதவியேற்ற பிறகு 16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட் மற்றும் இடைக்கால பொது பட்ஜெட் ஆயுட்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

2014- 15-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் ஜூலை 8-ம் தேதியும், பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது.இந்த கூட்டத்தொடரில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, டிராய் சீர்திருத்த மசோதா, செபி மசோதா ஆகியனவற்றை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்