முக்கிய செய்திகள்:
பாஜகவிற்கு சிவசேனா கெடு

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனையின் ஆதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், ரயில் கட்டண உயர்வு குறித்து வெளியான கட்டுரையின் விவரம்:

"ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவை கட்டணத்தில் விலை உயர்வு மும்பைவாசிகளை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளிவிடும். மேலும், இதன்படி மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகள் இரட்டிப்பாக உயரும்.

ஆனால், ரயில்வேத் துறை ரூ.28000 கோடி நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வின் மூலம் இந்த நஷ்டம் ஈடு செய்ய முடியும் என்று அந்த துறை கூறியுள்ளது. இது இந்த விலை உயர்வை சற்று நியாயப்படுத்துவதாக இருந்தாலும், இதனை வேறு வழியின்றி மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த ரயிலில், பாதுகாப்பு மற்றும் வசதியை ஏற்படுத்த இந்த விலை உயர்வு உதவிடும் என்று கூறப்பட்டாலும், மக்களும் எதிர்க்கட்சியினரும் இதனை ஏற்க கூடிய நிலையில் இல்லை.ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில், நமது ரயில்வே மிகவும் பின்தங்கிய நிலையிலும் மோசமான நிலையிலுமே உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையால் கூட்ட நெரிசல் உயர்ந்தாலும், வெகு குறைவான அளவிலே புதிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 15-20 ஆண்டுகளில், இருந்த அனைத்து ரயில்வே அமைச்சர்களும் இந்த துறையை சூறையாடி உள்ளனர். முக்கியமாக பிஹாரிலிருந்து வந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் மக்களுக்கானவராக செயல்படுவது போன்ற தோரணையை ஏற்படுத்தினார்.காங்கிரஸால் தேர்வு செய்யப்பட்ட பன்சாலின் உறவினர், ரயில்வே ஒப்பந்தங்களில் மிகப் பெரிய மோசடி செய்ததாக கையும் களவுமாக பிடிப்பட்டார். இது போன்ற முறைகேடுகள் தான், ரயில்வேயில் மிக பெரிய விபத்துகளும், அப்பாவி பயணிகளின் உயிரிழப்புக்கும் காரணமாகும்.மக்களுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், அதற்கான கட்டணத்தை செலுத்த அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகளின் வளம் பெற, அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

இதே விலை உயர்வை முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருந்தால், எதிர்கட்சியாக இருந்த நாங்கள் இதனை கடுமையாக எதிர்த்திருப்போம். ஆனால் தற்போது பாஜக கொண்டு வந்துள்ள கட்டண விலை உயர்வு, மக்களின் அத்தியாவசிய மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.மக்கள் இந்த கட்டண விலை உயர்வை கடுமையாக கண்டிக்கின்றனர். இருப்பினும், இதுவே இந்த ஆட்சியின் கடைசி விலை உயர்வாக இருக்கட்டும். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படட்டும்" என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்