முக்கிய செய்திகள்:
காஸ் விலையை மாதந்தோறும் மாற்ற முடிவு

மானியத்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப் பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக மானியத்துடன் கூடிய சமையல் காஸ் விலையையும் படிப்படியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் எரிபொருள் விலைக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பாக சமையல் காஸ் விலையில் மாதந்தோறும் மாற்றம் செய்யப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 13 சதவீதம் இராக்கில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சமையல் காஸ் மானியம் இதுதவிர சமையல் காஸுக்கு வழங்கப்படும் மானியம் இந்த ஆண்டு ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும்.

ஏற்கெனவே டீசலுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க மாதந்தோறும் அதன் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல் மானியத்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.10 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.7000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தற்போது ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் 12 சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கை குறைக்கப்படாது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமையல் காஸ் விலை உயர்வு குறித்து எண்ணெய் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மானியத்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 2012-ல் ஆண்டுக்கு 6 ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் 2013 ல் இந்த எண்ணிக்கை 9 ஆகவும், கடந்த ஜனவரியில் 12 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்