முக்கிய செய்திகள்:
கோவாவில் பிரதமர் மோடி

இந்திய கடற்படைக்கு ரஷியாவிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் கோடியில் நவீன போர்க்கப்பல் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.என்.எஸ் விக்ரமாதித்தியா என பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16–ந் தேதி கடற்கடையில் சேர்க்கப்பட்டது.

அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இந்த கப்பலின் பணியை தொடங்கி வைத்தார். விக்ரமாதித்தியா கப்பல் கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் பறந்து செல்லும் வகையில் விமான ஓடுதளங்களும், போர் தளவாடங்களை சேமித்து வைக்க கூடிய வசதிகளும் உள்ளன.

விக்ரமாதித்தியா கப்பலை பிரதமர் நரேந்திரமோடி இன்று பார்வையிட்டார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து பனாஜி வந்த பிரதமர் மோடி அங்கிருந்து சீ கிங், ராணுவ ஹெலிகாப்டரில் கடல் வழியாக பயணம் செய்து கப்பலில் இறங்கினார். அங்கு அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. போர்க்கப்பலின் செயல்பாடுகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

விக்ரமாதித்தியா கப்பலில் ‘மிக் 29 கே’ என்ற போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இரு விமானிகள் மட்டுமே அமரக்கூடிய அந்த விமானத்தில் பிரதமர் மோடி இரும்பு ஏணி வழியாக ஏறி விமானி இருக்கையில் அமர்ந்து உற்சாகப்படுத்தினார்.

விமானிகளுக்கு இது வசதியாக இருக்கிறதா? என்று கேட்டார். விமானத்தில் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தார். சில மணி நேரங்கள் வரை மோடி இந்த போர்க்கப்பலில் இருந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின்பு மோடியின் முதலாவது வெளியூர் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்