முக்கிய செய்திகள்:
டான்ஸ் பார்'களுக்குத் தடை : மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரத்தில் உள்ள டான்ஸ் பார்களுக்கும், ஹோட்டல்களில் நடனமாடவும் மாநில அரசு 2005-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடை அரசியலமைப்புக்கு எதிரானது என, மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் மாநில அரசுக்கு எதிராகவே உத்தரவிட்டது.

இந்த நிலையில், டான்ஸ் பார்களுக்கு தடை விதிப்பது தொடர்பான புதிய மசோதாவை மகாராஷ்டிர மாநில அரசு இயற்றியுள்ளது. அதன்படி, டான்ஸ் பார்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன், ஆடம்பர ஹோட்டல்களில் நடனமாடவும் அனுமதி மறுக்கப்படும்.

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தபடவுள்ள இந்தப் புதிய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மகளிர் அமைப்பினர் சிலர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சன்மித்ரா பிரபா தேசாய் என்பவர் கூறும்போது, "ஹோட்டல்களில் நடனத்திற்கு தடை விதிக்கப்படுவது, கேளிக்கைத் துறையில் பணிபுரிபவர்களை மிகவும் பாதிக்கும். பார்களில் நடனம் என்பதைத் தாண்டி, ஆடம்பர ஹோட்டல்களிலும் தடை என்ற மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தை முறையிடுவோம்.

மகாராஷ்டிர மாநில அரசு விதிக்கும் தடையால், தற்போது இந்தத் துறையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கும். திரையுலக நட்சத்திரங்கள் நடனமாட அனுமதிக்கும் மாநில அரசு, தங்கள் பிழைப்புக்காக நடனமாடுபவர்கள் மீது தடையை திணிப்பது ஏற்கத்தக்கது அல்ல" என்றார் அவர்.

மேலும் செய்திகள்