முக்கிய செய்திகள்:
மக்களவை கூட்டுக்கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை

நாட்டில் வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முக்கிய இலக்கு என குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.16ஆவது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வறுமையை ஒழிப்பது மிகவும் சவாலானது என எம்.பி.க்களுக்கு சுட்டிக்காட்டினார்.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும், உணவுப்பொருள் பதுக்கல் தடுக்கப்படும் என்றும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் குடியரசுத் தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் ஆதார பாதுகாப்புக்காக பிரதம மந்திரி விவசாய பாசனத் திட்டம், தேசிய அளவில் மருத்துவக் காப்பீடு திட்டம், அனைவருக்கும் நிரந்தர வீடு, அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி. ஐ.எம்.எம்.கள், கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரணாப் முகர்ஜியின் உரையில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு சகித்துக்கொள்ளாது, இதனை தடுக்க குற்றவியல் நீதிச்சட்டம் வலுப்படுத்தப்படும் எனவும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின வளர்ச்சியில் சிறுபான்மையினரையும் பங்களிக்க செய்ய நடவடிக்கை, மதரஸாக்களை நவீனமயமாக்கும் திட்டம் ஆகியவையும் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு கவலை தரும் பிரச்னைகள் எதுவாயினும் சம்பந்தப்பட்ட நாட்டுடன் பேச அரசு தயங்காது என்றும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைர நாற்கரத் திட்டம்

சிறு நகரங்களை இணைக்க குறைந்த செலவிலான விமான நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அதிவேக ரயில்களுக்கான வைர நாற்கரத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விவசாயப் பொருட்களை எடுத்து செல்வதற்கு, சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ரயில்வே இணைப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும். ரயில்வே துறையில் புதிய வடிவிலான மூலதனங்கள் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விலைவாசியைக் குறைக்க முன்னுரிமை

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே தமது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்று என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழாக இருப்பதாகவும் நாடு மிகவும் சிக்கலான கால கட்டத்தை கடந்து கொண்டிருப்பதை இது குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விலைவாசி ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு தமது அரசு முன்னுரிமை தரும் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களை பதுக்குவதை தடுத்தல், கறுப்புச் சந்தை நடைமுறைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

நடப்பாண்டில் போதிய பருமவமழை பொழியாது என தகவல்கள் வெளியாக உள்ள நிலையில் இவற்றை எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாகவும் அவர் பேசினார்

மேலும் செய்திகள்