முக்கிய செய்திகள்:
மோடி பதவி ஏற்பு விழா: மம்தா புறக்கணிக்க முடிவு

மோடி பதவி ஏற்பு விழாவில் மம்தா கலந்து கொள்ளமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திரமோடி, மம்தா பானர்ஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார்.

இதனால், ஆவேசமான மம்தா பானர்ஜி, மோடியை கழுதை என்றும், மத்தியில் நான் ஆட்சியில் இருந்தால் அவரை இடுப்பில் கயிறுகட்டி இழுத்து சிறையில் அடைப்பேன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு பெரிய வெற்றி கிடைத்தாலும் மத்தியில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டதால் மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு வாழ்த்து சொல்லவில்லை. மேலும் வருகிற 26–ந் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இதில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய அரசு சார்பில் அழைப்பு அனுப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கிடைத்தது. ஆனால் மம்தா பானர்ஜி மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளார். மேலும், தனது கட்சி எம்.பி.க்கள் கூட மோடி பதவி ஏற்பு விழாவுக்கு செல்லக்கூடாது என்று உத்தவிரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்