முக்கிய செய்திகள்:
பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தார்

பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. காங்கிரஸ்
தலைமையிலான மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் விடைபெற்றார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து அளித்து நினைவு பரிசும் வழங்கினார்.

இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். அப்போது அவர் பேசியதாவது:–

என்னுடைய வாழ்க்கையும், பிரதமர் பதவியில் இருந்த எனது 10 ஆண்டு கால ஆட்சியும் திறந்த புத்தகமாகும். எல்லா வகையிலும் நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்து வருகிறேன். இந்த நாட்டுக்காக நான் என்னால்
முடிந்த அனைத்தையும் செய்து முடித்துள்ளேன்.

காங்கிரஸ் தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய செய்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டது. இதற்காக நாம்
பெருமை கொள்ள வேண்டும்.

தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும். புதிதாக அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் அரசுக்கு நான் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதனுடைய இலக்குகளை
எட்ட வாழ்த்துகிறேன்.

இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வலிமையான நாடாக மாறியுள்ளது. இந்தியாவை மேம்படுத்துவதற்கான வளமும், ஆற்றலும் இன்னும் நம்மிடம் நிறைய உள்ளது. புதிய அரசு அதை
உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று நான் பிரதமராக இருந்து நாட்டு மக்களுக்கு எனது கடைசி உரையை ஆற்றுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்த போது, நான் சுறுசுறுப்பையும் விடா முயற்சியையும்
ஆயுதமாக கொண்டு செயல்பட தொடங்கினேன்.

வாய்மையே எனது கலங்கரை விளக்காக உள்ளது. நாட்டு மக்களுக்கு எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதன்படியே 10 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளேன்.

இன்று நான் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடவுள் அளிக்க போகும் இறுதி தீர்ப்பு எனக்கு முன்னதாக நன்றாகவே தெரிந்திருந்தது. நாம் பெற்ற தீர்ப்பை கவுரவப்படுத்த வேண்டும்.

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் நமது ஜனநாயக அரசியலின் அடித்தளத்தை மேலும் ஆழப்படுத்தி வலிமையாக்கி உள்ளது.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

இன்று 11.30 மணிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரி சபையின் கடைசி கூட்டம் நடந்தது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.

அப்போது அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தனக்கு ஒத்துழைப்பு அளித்த மந்திரிகளுக்கு மன்மோகன் சிங் நன்றி கூறி அனைவரிடமும் இருந்து விடைபெற்றார்.

இன்று மதியம் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மன்மோகன் சிங் அங்கிருந்து விடை பெற்றார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விடை பெறும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மந்திரி சபையில் இடம் பெற்றவர்களுக்கு விருந்தளிக்கிறார்.

மேலும் செய்திகள்