முக்கிய செய்திகள்:
தனித்தெலங்கானா அமைக்கும் சட்ட மசோதா - குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது மத்திய அரசு, ஆந்திராவில் தொடரும் பதற்றம்

தனித்தெலங்கானா அமைக்கும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்ததையடுத்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில முதல்வர் திரு. கிரண்குமார் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து, 10 மாவட்டங்களை கொண்ட தனித் தெலங்கானா அமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திராப் பகுதியில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், ஆந்திராவில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திர முதல்வர் திரு. கிரண்குமார் ரெட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 12-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தனித்தெலங்கானாவை எதிர்க்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து செயல்படுமாறு முதலமைச்சர் திரு. கிரண்குமார் ரெட்டி, தனது ஆதரவாளர்களை அறிவுறுத்தி இருக்கிறார். தெலங்கானாவை எதிர்க்கும் மத்திய அமைச்சர்கள், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை வரும் 11-ம் தேதி திரு. கிரண்குமார் ரெட்டி கூட்டியுள்ளார். தெலங்கானா மசோதாவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும், மத்திய அமைச்சருமான திரு. சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதனிடையே தனித்தெலங்கானா அமைக்கும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்ததையடுத்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மேற்குவங்கம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, விரைவில் டெல்லி திரும்பியவுடன் இதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. இதையடுத்து, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம் அல்லது ஆந்திர அரசின் கருத்தை குடியரசுத் தலைவர் கேட்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்