முக்கிய செய்திகள்:
எல்லைப் பகுதி வர்த்தகத்தை பயன்படுத்தி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதி வர்த்தகத்தை பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நிதியுதவி வழங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 80 கோடி ரூபாய் அளவுக்கு இவ்வாறு நிதியுதவி வழங்கியிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உரையாற்றுகையில், காஷ்மீர் பிரச்னை காரணமாக இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் மூளும் என குறிப்பிட்டார். இந்த மிரட்டல் குறித்து, பிரதமர் டாக்டர் மோகன் சிங்கிடம் கருத்து கேட்டபோது, இந்தியாவுடன் எந்த போர் நடந்தாலும் அதில் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும், பிற ஏஜென்சிகளும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதி வர்த்தகத்தை பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்த அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாஹுதீன் உள்ளிட்ட 10 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 80 கோடி ரூபாய் அளவுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் என்ற போர்வையில் பாகிஸ்தானில் இருந்தபடி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் - இந்திய எல்லைப் பகுதி வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி, ஜம்மு-காஷ்​மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைப்பததோடு, பணமும் அளிப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்