முக்கிய செய்திகள்:
இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் வெற்றிபெற முடியாது - நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் மன்மோகன்சிங் பதிலடி

இந்தியாவுடன் போரிட்டு, என் வாழ்நாளில் பாகிஸ்தான் வெற்றிபெற முடியாது என நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் மன்மோகன்சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றபோது, இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், கடந்த பல மாதங்களாக எல்லைப்பகுதியில் அத்துமீறும் பாகிஸ்தான் படையினர், அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினை காரணமாக இருநாடுகளிடையே மீண்டும் போர் மூளும் நிலை இருப்பதாகவும், தனது வாழ்நாளில் சுதந்திரமான காஷ்மீரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக பாகிஸ்தானின் Dawn பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். தனது வாழ்நாளில் இந்தியாவுடனான எந்தப் போரிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார். நவாஸ் ஷெரீப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் என்றென்றும் இணைந்திருக்கும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் திரு.ஃபரூக் அப்துல்லா, பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமே தவிர, பேச்சுக்களின் மூலம், பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். இதனிடையே, நாவஸ் ஷெரீப்பின் கருத்து தேவையற்றது என பாதுகாப்பு விமர்சகர் உமர் ஆகா தெரிவித்துள்ளார். 21ம் நூற்றாண்டில் போர் குறித்து பேசுவது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்