முக்கிய செய்திகள்:
புவிஈர்ப்பு விசையில் இருந்து விலகி, சூரியனின் நீள்வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது மங்கள்யான் - செவ்வாயை நோக்கிய நீண்ட பயணத்தை தொடங்கியது விண்கலம்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், புவிஈர்ப்பு விசையில் இருந்து விலகி, சூரியனின் நீள்வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

இஸ்ரோ, கடந்த மாதம் 5ம் தேதி அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தில் 5 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபடும் மங்கள்யான் விண்கலம், கடந்த 30ம் தேதிவரை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 12.49 மணிக்கு மங்கள்யான் விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட பயணத்தைத் தொடங்கியது. பூமியில் இருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மங்கள்யான் விண்கலம், நேற்று அதிகாலை 1.14 மணிக்கு புவிஈர்ப்பு விசையில் இருந்து விலகி, சூரியனின் நீள்வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாடு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இந்தப் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தற்போது வினாடிக்கு 32 புள்ளி 8 கிலோமீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். புவிஈர்ப்பு விசையைக் கடந்து, சூரியனின் நீள்வட்டப்பாதையை அடைந்த இந்தியாவின் முதல் விண்கலம் என்ற பெருமை மங்கள்யானுக்கு கிடைத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்ணில் அனுப்பியுள்ள காசினி செயற்கைக்கோள், சனி கிரகத்தை மிகத் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நாசா நிறுவனம், சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவுக்கு சனி கிரகத்தின் துருவப்பகுதியில் சுற்றி வரும் Hexagon என்ற மிகப்பெரிய புயல் இது என்றும், சூரிய குடும்பத்தில் இவ்வளவு பெரிய புயல் வேறு எங்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சனி கிரகத்தின் டைட்டான் நிலவையும், காசினி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

இதனிடையே, விண்ணில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப், பெயரிடப்படாத வேறு கிரகங்களின் புகைப்படங்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இதனை ஆய்வு செய்ததில், அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்