முக்கிய செய்திகள்:
சூரியனின் மேற்பரப்பில் இருந்து 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பயணிக்கும் ISON வால் நட்சத்திரம் - வெறும் கண்களால் பார்க்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியை சுற்றிவரும் வால் நட்சத்திரங்களில் ஒன்று, வரும் 28-ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் எரிந்து மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ISON என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், தற்போது சூரியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இம்மாதம் 28-ம் தேதியன்று ISON சூரியனின் மேற்பரப்பில் இருந்து 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்கிறது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் அதனை தாக்குவதால், ISON வால் நட்சத்திரத்தின் வெப்பநிலை 2,760 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிகரிக்கும். இந்த வெப்பத்தை தாங்கமுடியாமல், வால் நட்சத்திரத்தில் உள்ள பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்கள் அனைத்தும் எரிந்து ஆவியாகிவிடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒருவேளை, சூரியனின் வெப்பத்தைத் தாக்குப்பிடித்து, ISON வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்துசென்றால், அதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு சூரியனை நெருங்கி வரும் ISON வால் நட்சத்திரத்தை பார்த்துவருகின்றனர். 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ISON வால் நட்சத்திரம் முதன்முதலாக‍ கண்டறியப்பட்டது. சூரிய மண்டலம் உருவானபோது, சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கிரகங்களாக உருவெடுக்காத பகுதிகளே வால் நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்