முக்கிய செய்திகள்:
செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - நாசா விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தில், ஏரி இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆய்வில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரக ஆய்வுபணியில் ஈடுப்பட்டுள்ள நாசா விஞ்ஞானிகள், ரோவர் குரியோசிட்டி விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்கலத்தில் உள்ள கருவிகள் செவ்வாய் கிரக மேற்பரப்பில் உள்ள படிமங்களைத் தோண்டி அவற்றின் விவரங்களை விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றன. அவ்வாறு பெறப்பட்ட தகவல்களில் இருந்து செவ்வாய் கிரகத்தில் நன்நீருடன் கூடிய ஏரி, சுமார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மண்ணியல்துறை நிபுணர் பசடினா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு குறித்து மேலும் பல தகவல்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கடல்பகுதிகளில் காணப்படும் நுண்ணுயிரிகள், களிமண் போன்றவை இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், தண்ணீர் பாயும் இடங்களில் காணப்படும் பொருட்கள் இருந்ததற்கான விவரங்கள் அதிகஅளவு தற்போது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை மனித குலம் வாழ்வதற்கான ஏற்ற சூழலுக்கு உதவ கூடியவை என்றும் கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரக ஆய்வில் மேலும் சுவாரஸ்யத்தை உண்டாக்கியுள்ளன. கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இறக்கப்பட்ட ரோவர் விண்கலம், சுமார் 250 சதுரகிலோ மீட்டர் வரை பயணித்துள்ளதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள படிமங்களை தோண்டும் பணியை மேற்கொண்டு அவற்றின் விவரங்களை விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருகிறது.

மேலும் செய்திகள்