முக்கிய செய்திகள்:
மறைந்த தென்னாஃப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு வரும் 15-ம் தேதி இறுதி சடங்கு - லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி

ஜோகனஸ்பெர்க்-ல் நேற்று மரணமடைந்த, தென்னாஃப்ரிக்காவின் முன்னாள் அதிபரான, நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்குகள் வரும் 15-ம் தேதி நடைபெறுமென அந்நாட்டு அதிபர் ஜேகப் சுமா முறைப்படி அறிவித்துள்ளார்.

கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்டவரும், உலகின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவருமான நெல்சன் மண்டேலா, கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜோகனஸ்பெர்க்-ல் அவரது வீட்டில் மரணமடைந்தார்.

மண்டேலாவின் மறைவுக்கு, இந்திய நாடாளுமன்றத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா சார்பில், கழக நாடாளுமன்றக் குழு தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை இரங்கல் உரை நிகழ்த்தினார். மண்டேலாவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மண்டேலாவின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜோகனஸ்பெர்க்-ல் லட்சக்கணக்கானோர் கூடி பாரம்பரிய நடனமாடியும், பாடல்களை பாடியும், மலர் கொத்துகளை வைத்தும் மறைந்த மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மண்டேலாவின் மறைவையொட்டி, தென்னாஃப்ரிக்காவில் 10 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி மண்டேலாவின் சொந்த ஊரான ஈஸ்டன் கேப்பில் உள்ள அவரது வீட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என தென்னாஃப்ரிக்க அதிபர் ஜேகப் சுமா தெரிவித்துள்ளார். மண்டேலாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த வாரம் தென்னாஃப்ரிக்கா செல்கிறார்.

தமிழக அரசு அறிவிப்பு

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வரும் 10-ம் தேதி வரை அரசு விழாக்கள் ரத்து செய்யப்படுவதோடு, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிற வெறியை எதிர்த்து போராடி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவருமான நெல்சன் மண்டேலா நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். மண்டேலாவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய நாடாளுமன்றத்திலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில், வரும் 10-ம் தேதி வரை 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரசு விழாக்கள் ரத்து செய்யப்படுவதோடு, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்