முக்கிய செய்திகள்:
மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷே சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், சர்வதேச சமூகம் பொறுமை இழக்கும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இலங்கையில், ராஜபக்ஷே அரசே மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், சர்வதேச சமூகம் பொறுமை இழந்துவிடும் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 17 சமூக ஊழியர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்றிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் வரலாறு காணாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மறுத்தால், சர்வதேச சமூகத்தின் பொறுமையை சோதிப்பதாகிவிடும் என ​தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள முட்டுர் கிராமத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் ஐ.நா. அனுமதியுடன் பிரான்ஸ் நாட்டின் "பசிக்கு எதிரான இயக்கம்" ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீது, திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 17 பேர் பலியானதாக அந்த இயக்கத்தின் செயல் அலுவலர் மைக்பென்ரோஸ், பாரீஸில் நேற்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற கொடூரச் செயல்கள் குறித்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க, ஐக்கிய நாடுகள் சபை, சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்