முக்கிய செய்திகள்:
இத்தாலிய நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் வழங்கப்பட்ட விவகாரம் : இந்தியாவின் முன்னாள் விமானப்படை தளபதியை 7 முறை சந்தித்து பேசியதாக இத்தாலி நீதிமன்றத்தில் இடைத்தரகர் சாட்சியம்

நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இத்தாலிய நிறுவனத்திடமிருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தை பெற அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியை 7 முறை சந்தித்ததாக இடைத்தரகர் கைடோ ஹாஸ்ச்கே இத்தாலிய நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தியாவில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட ​மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை 3ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்க இத்தாலிய நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி மற்றும் அவரின் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்களை இத்தாலிய அரசு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இத்தாலி நாட்டின் மிலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், இடைத்தரகர் கைடோ ஹாஸ்ச்கே சாட்சியம் அளித்துள்ளார். இந்தியாவிற்கு அதிநவீன ஹெலிகாப்டர்களை வழங்கும் ஒப்பந்தத்தை பெறுவதற்காக எஸ்.பி. தியாகியை 7 முறை சந்தித்தாகவும், அப்போது தியாகியின் உறவினர்களிடம் ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த தொகையில் 7 சதவீதம் லஞ்சமாக வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், இதனைத்தொடர்ந்து எஸ்.பி.தியாகியின் உறவினர் ஷசி தியாகியை ரோம், துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 7 முறை சந்தித்தாகவும், கைடோ ஹாஸ்ச்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த லஞ்சப் பணம், இந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பொறியியல் சேவை நிறுவனங்கள் வாயிலாக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்