முக்கிய செய்திகள்:
இந்திய தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்த விவகாரம் - டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

இந்திய தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் இணையதள தகவல் பரிமாற்றங்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு இந்தியா உள்பட, உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் இணையதள தகவல் பரிமாற்றங்களை உளவு பார்த்து வந்ததை அமெரிக்க உளவு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்தது. தப்பி வந்த ஸ்நோடன், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரான ஜெனரல் கெய்த் ப்ரெய்ன் அலெக்சாண்டர், கடந்த மாதம் 3 நாள் பயணமாக டெல்லி வந்தார். அப்போது, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு இணையதள தகவல்களை சேகரிப்பதாகக் கூறி, பதிவு செய்த தகவல்கள் உண்மையில் இந்தியா மீதான வணிக மற்றும் அரசியல் ​​ரீதியிலான உளவு பார்க்கும் தகவல் சேகரிப்புதான் என்று அப்போது இந்திய அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்திலும், நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்ததைத் தொடர்ந்து, இந்தியத் தரப்பில் தற்போது, இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்திய அரசியல் தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அமெரிக்க தூதர் நான்சி போவலை சந்தித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், கடந்த ஜுன் மாதம் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரியை சந்தித்து கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்