முக்கிய செய்திகள்:
டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜன்குமார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

சீக்கியர் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜன்குமார், தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி தாக்கல் செய்துள்ள மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் மூண்டது. டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஸ் டைட்லர் மற்றும் சஜன்குமார் உள்ளிட்டோரின் தூண்டுதலின்பேரிலேயே சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, நீண்டகாலமாக நடைபெற்று வந்த நிலையில், ஜெகதீஸ் டைட்லர் குற்றமற்றவர் என சி.பி.ஐ. அறிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சஜன்குமார், தன்மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, மனுவை நிராகரித்ததுடன், குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை சஜன்குமார், எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்