முக்கிய செய்திகள்:
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனே அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு கடந்த மாதம் 11-ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. ஆர்.எம். லோதா, திரு. மதன் B. லோகூர், திரு. குரியன்ஜோசப் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படாததால், புதிய மின் திட்டங்களையும், புதிய அணைகளை கட்டுவதற்கானப் பணிகளிலும் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாகவும், இதனை தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவேரி மேற்பார்வை குழுவினால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் திரு. வைத்தியநாதன் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, தமிழக அரசு மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்