முக்கிய செய்திகள்:
குஜராத் மாநிலத்தில் கூலி தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனமும் லாரியும் மோதிய விபத்து - ஏழு பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

குஜராத் மாநிலம் தாரபூர் நெடுஞ்சாலைப்பகுதியில் இன்று கூலி தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். சுமார் பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு வேலைதேடுவதற்காக சுமார் 20- பேர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, தாரப்பூர்-வாடாமேன் நெடுஞ்சாலையில் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். 5 குழந்தைகள் உட்பட 10-பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் இடறிவிழுந்த பெண் ஒருவர், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே 45 நிமிடம் உயிருக்குப் போராடி பரிதாபமாக உயிரிழந்தார். எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தனது தாயாருடன் அந்த பெண் இன்றுகாலை இறங்கினார். அந்த நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அந்த வழியே ரயிலில் ஏற முற்பட்டனர். இதனால் அந்தப் பெண் இடறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்