முக்கிய செய்திகள்:
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு - 15 ரூபாய் வரை அதிகரிக்கும் எனத் தகவல்

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு 15 ரூபாய் வரை உயர்த்தலாம் என டெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம்காட்டியும், ரூபாயின் மதிப்பு சரிந்துவருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாதந்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து செலவு அதிகரித்து, விலைவாசிகளும் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், 5 வடமாநில தேர்தல்கள் முடிந்தபின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 ரூபாய் வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலிண்டர்களை விநியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என கேஸ் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருவதால், அந்த உயர்வை சிலிண்டர் விலையுடன் சேர்த்து 15 ரூபாய்வரை அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்திருப்பதாக அதிகார வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிகபட்ச விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிலிண்டர் லாரிகளுக்கான போக்குவரத்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 ரூபாயில் இருந்து, 14 ரூபாய் வரை தூரத்தை பொருத்து நிர்ணயிக்கப்பட்டது. தற்போது லாரி கட்டணம் மீண்டும் உயர்த்தப்படவிருப்பதால், சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்