முக்கிய செய்திகள்:
டெல்லி மாணவி பாலியல் வழக்கு - 3 ஆண்டு தண்டனை பெற்ற சிறுவன் மீது மீண்டும் கொலைக் குற்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பெற்றோர் மனு

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற சிறுவன் மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கியெறியப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய மற்ற 4 பேர் மீதான வழக்கு, டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளியான சிறுவன் மீதான வழக்கு, டெல்லி சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாணவியின் பெற்றோர், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களது மகளை இரும்பு கம்பியால் கொடுமையாக தாக்கி, உடல் முழுவதும் சிதைத்து, கொடிய நிலைக்கு ஆளாக்கியவர்களில், ஒருவரான அந்த சிறுவன் மீது, கிரிமினல் குற்றத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்