முக்கிய செய்திகள்:
விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் நடவடிக்கைகளில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது. இதனால், விளைநிலங்களும், வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக, அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கெயில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 7 மாவட்ட விவசாயிகளின் சார்பில், விவசாய பிரதிநிதிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, விளைநிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் அழைத்து கருத்து கேட்கும்படி, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, மாவட்டம் வாரியாக விவசாயிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கருத்து கேட்டனர்.

இதனடிப்படையில், கெயில் நிறுவனம் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், கெய்ல் நிறுவனம் ஏற்கெனவே குழாய்கள் பதித்ததாலும், குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டியதாலும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டும் - மரங்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் -குழாய்களை விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, கெயில் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக, கெய்ல் நிறுவனம், எரிவாயு குழாய் பதிப்பதற்கு தடை விதிப்பதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்