முக்கிய செய்திகள்:
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - விசாரணை குழுவின் அறிக்கை தலைமை நீதிபதியிடம் தாக்கல்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மீது, பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருந்த குழு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கையை இன்று சமர்ப்பித்தது. பாலியல் தொந்தரவு புகாருக்கு உள்ளானவர் முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பயிற்சியில் இருந்த தனக்கு, நீதிபதி ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இக்குழுவினர் 6 முறை கூடி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர் முன்னாள் நீதிபதி திரு.ஏ.கே. கங்குலி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணிடமும், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி திரு.ஏ.கே. கங்குலியிடமும் வாக்குமூலங்களைப் பெற்றது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ரஞ்சனா பிரகாஷ்தேசாய் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை, தலைமை நீதிபதி திரு.சதாசிவம், அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்