முக்கிய செய்திகள்:
பாலியல் புகாரில் தலைமறைவாகியுள்ள தருண் தேஜ்பாலை நெருங்குகிறது போலீஸ் : பிற்பகல் 2.30 மணி வரை தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கோவா நீதிமன்றம் உத்தரவு

டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை பிற்பகல் இரண்டரை மணிவரை கைது செய்வதற்கு கோவா நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. நீதிமன்றத் தடை நீங்கிய பின்னர், தேஜ்பால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தருண் தேஜ்பால், நேற்று மாலைக்குள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கெடு முடிவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் கோவா போலீசாருக்கு தேஜ்பால் அனுப்பிய ஃபேக்ஸில், காவல்நிலையத்தில் சரணடைய கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை கோவா போலீசார் நிராகரித்தனர். பனாஜி முதலாவது நீதிமன்ற நீதிபதி சரிகா பல்தேசாய், பிணையில் வெளிவரமுடியாதபடி தேஜ்பாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து, இன்று அதிகாலை அவரை கைது செய்வதற்காக, வீட்டிற்கு சென்ற போலீசார், சோதனை நடத்தினர். அப்போது, தேஜ்பால் திடீரென தலைமறைவானார்.

இந்நிலையில், அவரைத் தேடும் பணியில் கோவா போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தேஜ்பால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட கோவா நீதிமன்றம், தேஜ்பாலுக்கு பிற்பகல் 2.30 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தேஜ்பாலின் குடும்பத்தினர் டெல்லியிலிருந்து, கோவா செல்லும் விமானத்தில் பயணிக்க பதிவு செய்துள்ளனர். இதனால் இன்று மாலை 5 மணிக்கு கோவா போலீசாரிடம், தேஜ்பால் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்