முக்கிய செய்திகள்:
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப இந்தியா அடிபணிந்து போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப இந்தியா அடிபணிந்து போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அணுஆயுதத் திட்டம் தொடர்பாக ஈரானுடன் ஏற்பட்ட மோதலில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. அமெரிக்காவின் நிலைக்கு ஏற்ப, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா திடீரென நிறுத்தியது. இந்நிலையில், ஈரானில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையடுத்து, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அண்மையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, ஈரான் உடனான பொருளாதார உறவை மீண்டும் மேம்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு ஏற்றவாறு செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் இப்போக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினரான திரு. சீதாராம் யெச்சூரி, 2011-ம் ஆண்டு வரை ஈரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அதனை கைவிட்டதாகவும், தற்போது மீண்டும் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நிலையற்ற போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்