முக்கிய செய்திகள்:
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக, காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரும் வழக்கு - தமிழக அரசு மனு மீது வரும் 3-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, வரும் 3-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்குமேல் ஆகிறது என்றும், மத்திய அரசிதழில் இறுதித்தீர்ப்பு வெளியானவுடனே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திருக்க வேண்டியது நடைமுறை என்றும் ஆனால், இவற்றை அமைக்க மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியையும் செயல்படுத்தவில்லை என்றும் தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் தற்காலிகமாக அமைத்துள்ள காவிரி மேற்பார்வைக் குழுவினாலும், தமிழகத்துக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றும், காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் 4 முறை நடைபெற்றுள்ள போதிலும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படாததால், கர்நாடக அரசு, விதிமுறைகளை மீறி, புதிய அணைகள் கட்டுவது, புதிய மின்திட்டங்களை செயல்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது என்றும், தமிழக அரசின் அனுமதி பெறாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதை தடுக்க, மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த மனு இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சதாசிவம், நீதிபதிகள் திரு. ரஞ்சன் ஜோஹாய், திரு. சிவகேர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பரிசீலனைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. சி.எஸ். வைத்தியநாதன், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தி, மத்திய அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது, வரும் 3-ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்