முக்கிய செய்திகள்:
தனித் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு இன்று இறுதிகட்ட ஆலோசனை - மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்

ஆந்திரா பிரிவினையை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு இன்று கூடவிருக்கிறது. மத்திய அரசு தயாரித்துள்ள தெலங்கானா தனி மாநில மசோதாவுடன் இக்குழுவின் அறிக்கையையும், இணைத்து மத்திய அமைச்சரவையின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி தெலங்கானா மாநிலத்தை அமைப்பது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எனப்படும் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தெலங்கானா மாநிலத்தை ஆதரித்து அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இதனிடையே தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதா மத்திய அரசால், தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பிரச்சினையை பற்றி ஆழமாக பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக உள்துறை அமைச்சர் திரு. சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்று கூடி, தனது அறிக்கையை இறுதி​செய்யவிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செய்தியாளரிடம் பேசிய திரு. சுஷில் குமார் ஷிண்டே, குழுவின் அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், தனி தெலங்கான வரைவு மசோதாவுடன் சேர்ந்து இந்த அறிக்கையும் மத்திய அமைச்சரவையில் பரிசீலனைக்காக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்