முக்கிய செய்திகள்:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் : குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அமலாக்க இயக்ககத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அமலாக்க இயக்ககத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரித்துறைக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பு வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்க உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக, ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் சி.பி.ஐ., புலன்விசாரணை நடத்தி வருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் திரு. பிரஷாந்த் பூஷன்,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்க இயக்ககமும் ஒரேநேரத்தில் இணைந்து செயல்பட்டதுபோல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்திலும், இந்த இரு அமைப்புகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அமலாக்க இயக்ககத்திற்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி திரு. ஆர்.எம். லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்