முக்கிய செய்திகள்:
சிறுமி ஆருஷி கொலை வழக்கு - பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த ராஜேஷ்- நுப்பூர் தல்வார் தம்பதியரின் மகள் ஆருஷியும், அவர்களது வீட்டில் பணியாற்றி வந்த ஹேம்ராஜ் என்பவரும், கடந்த 2008-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். டாக்டர்களான இந்த தம்பதியினரின் வீட்டிலேயே அவர்களது மகளும், பணியாளரும் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த இரட்டை கொலை தொடர்பாக, ஆருஷியின் பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்த வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆருஷியின் பெற்றோர், ராஜேஷ், நுப்பூர் தல்வார் ஆகியோரே குற்றவாளிகள் என ​சி.பி.ஐ. நீதிபதி திரு. ஷியாம் லால் தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இரட்டைக் கொலை வழக்கில், ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் செய்திகள்