முக்கிய செய்திகள்:
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் உடமைகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் உடமைகளை, அந்நாட்டு அரசு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமத்தில் வசித்து வந்த சரப்ஜித்சிங் என்ற விவசாயி, குடிபோதையில் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிட்டார். அவரை கைது செய்த பாகிஸ்தான் அரசு, 1990-ம் ஆண்டு, பாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி மரணதண்டனை விதித்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித்சிங் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் உயிரிழந்தார். அவரது உடமைகளை தங்களிடையே ஒப்படைக்க வேண்டும் என சரப்ஜித்சிங்கின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை ஏற்று, பாகிஸ்தான் அரசு, சரப்ஜித்சிங்கிற்குச் சொந்தமான 36 பொருட்களை, இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. அவற்றை, சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்