முக்கிய செய்திகள்:
மும்பையில் 166 பேரின் உயிரை பலி கொண்ட தாக்குதல் சம்பவத்தின் 5-வது ஆண்டு தினம் - தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வீர மரணமடைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி

மும்பையில் 166 பேரின் உயிரிழப்புக்கு காரணமான தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் ஐந்தாவது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு இதே நாளில் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல், யூதர்கள் வசிக்கும் நரிமன் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். தேசிய பாதுகாப்புப்படையினர் தீரத்துடன் செயல்பட்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் அண்மையில் தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் காவல்துறை உயர் அதிகாரி கர்கரே உள்ளிட்டோர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் ஐந்தாவது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மும்பையில் உள்ள காவல்துறை திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் நலனுக்கான குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெஸ்ரிக், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்