முக்கிய செய்திகள்:
ஆந்திராவை நெருங்கியது லெஹர் புயல் : ராணுவம், கப்பல்படை உஷார்படுத்தப்பட்டுள்ளன - பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

லெஹர் புயல் அந்தமான் தீவுகளை கடந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை நெருங்கியுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான லெஹர் புயல், அந்தமான் தீவுகளைக் கடந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கும், காக்கிநாடாவுக்கும் அருகில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, கடும் புயலாக மாறி, நாளை மறுநாள் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லெஹர் புயல் காரணமாக, நாளை முதல், ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 200 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவம், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியன உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களை கூடுதலாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை ஆந்திர மாநில அரசு கோரியுள்ளது. மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்கள் உதவியும் நாடப்பட்டுள்ளது.

லெஹர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஃபிலின் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநில கடலோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்