முக்கிய செய்திகள்:
பெண் செய்தியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் : தெஹல்கா நிர்வாக ஆசிரியர் மற்றும் 3 பெண் ஊழியர்களிடம் கோவா போலீசார் விசாரணை

பெண் செய்தியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில், தெஹல்கா புலனாய்வு இதழின் நிர்வாக ஆசிரியர் மற்றும் டெல்லி அலுவலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்களின் வாக்குமூலத்தை கோவா போலீசார் நேற்று பதிவு செய்தனர். எனினும், குற்றம் சாட்டப்பட்ட செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பாலிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமலேயே திரும்பியுள்ளனர்.

தெஹல்கா பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் தருண் தேஜ்பால், கோவாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்குச் சென்றபோது, அந்தப் பத்திரிகையின் பெண் செய்தியாளரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், தேஜ்பால் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக, டெல்லி தெஹல்கா தலைமை அலுவலகத்திற்கு நேற்று 4 பேர் கொண்ட கோவா போலீசார் சென்றனர். அங்கு, தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அவரது மொபைல் ஃபோன், லேப்டாப் ஆகியவற்றையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், வழக்குதொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவுடன் அதுகுறித்து, அப்பெண் செய்தியாளர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய 3 ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, புகார் அளித்த பெண் செய்தியாளர் அளித்த பேட்டியில், புகாரிலிருந்து தேஜ்பாலை விடுவிக்க, அவரது சார்பில் சிலர் தனது குடும்பத்தினரை அணுகியதாக தெரிவித்துள்ளார். இப்பிரச்னையில் தனது குடும்பத்தினருக்கு நெருக்குதல் அளிக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்