முக்கிய செய்திகள்:
"லெஹர்" புயல் வரும் 28-ம் தேதி, மசூலிபட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் - தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "லெஹர்" புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே ஆயிரத்து 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல், வரும் 28-ம் தேதி, மசூலிபட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே நண்பகல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள "லெஹர்" புயல் நேற்றிரவு அந்தமான் தலைநகர் போர்ட் ப்லேர் அருகே கரையைக் கடந்தது. இப்புயல் காரணமாக, சென்னையிலிருந்து அந்தமானுக்குச் செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே நண்பகல் கரை‌யைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனிடையே, கன்னியாகுமரி கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 புள்ளி 2 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 100 கன அடியும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அதிகபட்சமாக, ராமநாதபுர மாவட்டம் தங்கச்சிமடத்தில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை​பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்