முக்கிய செய்திகள்:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.3,600 கோடி கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி கணக்குகளில், இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 3,600 கோடி ரூபாய், கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்படாமல் அப்படியே இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டு, தொடர்ந்து 8 ஆண்டுகள் செயல்படுத்தப்படாமல் இருந்தால், அது கேட்கப்படாத தொகையாக வங்கிக் கணக்கில் ஒதுக்கப்படும். அதேபோல, நடப்புக் கணக்கு மற்றும் வைப்புக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் தொகையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரும்பப் பெறாமல் இருந்தால், அதுவும் கேட்கப்படாத தொகையாக வங்கிக் கணக்கில் ஒதுக்கப்படும். இந்த வகையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட சில அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும், ஐசிஐசிஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளிலும் தொடங்கப்பட்டிருந்த ஒன்று புள்ளி மூன்று மூன்று கோடி வங்கிக் கணக்குகளின் கீழ், சுமார் 3,600 கோடி ரூபாய் பணம் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கணக்குத் தொடங்கியவர்கள் மேலும் தொடர முடியாத சூழ்நிலையாலும், இடம் மாறவேண்டிய நிர்ப்பந்தங்களாலும், வங்கிகளில் பணம் அப்படியே தேங்கிவிடுகிறது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அந்தப் பணத்தை திருப்பி எடுக்க விரும்புவோர், தமது அடையாளம், வீட்டு முகவரி மாற்றம் மற்றும் வங்கிகள் கேட்கும் ஆவணங்களை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்