முக்கிய செய்திகள்:
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில், வங்கி பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சம்பவம் : 4 தினங்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடக போலீசார் திணறல்

பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில், வங்கி பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற விவகாரத்தில், சம்பவம் நடந்து 4 தினங்கள் ஆன பின்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடக போலீசார் திணறி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் என்.ஆர். சர்கிள் பகுதியில் காவல்நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில், கடந்த 19-ம் தேதி பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் என்ற வங்கிப் பெண் அதிகாரியை, அரிவாளால் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டினார். கண்காணிப்பு கேமிராவில் பதிவான இந்தக் காட்சி, நாடு முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரைப் பிடிப்பதற்காக, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடக போலீசார் திணறி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, ஆந்திராவில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்