முக்கிய செய்திகள்:
அஸ்ஸாமில் கோக்ரஜார் நகர நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு - உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

அஸ்ஸாமில் கோக்ரஜார் நகரின் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை போலீசார் உரிய நேரத்தில் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ததால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது.

கோக்ரஜார் நகரம் மக்கள்தொகைப் பெருக்கமும், நெருக்கமும் நிறைந்த நகரம். இந்நகரின் மையப்பகுதியில் உள்ள நீதிமன்றம், மார்க்கெட் இரண்டையும் இணைக்கும் சுவரின் அருகே, வெகுநேரம் எடுக்கப்படாமல் ஒரு பிளாஸ்டிக் பை கிடந்ததை பார்த்த போலீசார் அதுகுறித்து வெடிகுண்டு நிபுணர் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிபுணர் குழுவினர், அரிசியும், காய்கறிகளும் வைக்கப்பட்டிருந்த அந்தப் பைக்குள் சக்திவாய்ந்த டைம்பாம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக அதனை செயலழிக்கச் செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோக்ரஜார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சுர்ஜித் சிங் பனெஸ்வர், 3 கிலோ எடை கொண்ட அந்த டைம்பாம், மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், அது வெடித்திருந்தால், ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார். விசாரணையில், இந்த வெடிகுண்டை வைத்தது மேற்கு வங்கத்திலிருந்து செயல்படும் தேசிய விடுதலை இயக்கம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்