முக்கிய செய்திகள்:
புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய விவகாரம் : கண்டனம் தெரிவித்து அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்து, அரசுப் பேருந்து ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்கள் அங்குள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தியதால், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் காயமடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தடியடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மட்டுமின்றி அம்மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய இடங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் நடைபெறும் இப்போராட்டத்தால், அங்கிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்