முக்கிய செய்திகள்:
கரையை நெருங்கியது "ஹெலன்" புயல் - ஆந்திராவில் பலத்த காற்று மற்றும் கனமழை, தமிழகம் தப்பியது

வங்கக்கடலில் உருவாகியுள்ள "ஹெலன்" புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தை நெருங்கியுள்ளது. இதன் விளைவாக அம்மாநிலத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹெலன் புயல், இன்று காலை நிலவரப்படி, மத்திய மேற்கு விரிகுடாப் பகுதியில் மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயல், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெல்ல மெல்ல நகர்ந்து மசூலிப்பட்டினம் கடற்கரையை நோக்கி முன்னேறி வருகிறது.

இது தொடர்பாக, இன்று காலை வெளியிடப்பட்ட சிறப்பு வானிலை அறிக்கையில், மசூலிப்பட்டினத்திற்கு அருகே ஹெலன் புயல் நிலைகொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்திற்கு விசாகப்பட்டினம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, குண்டூர் மற்றும் கிருஷ்ணா உட்பட ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்களில், கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு நூறு முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் மிகக் கடுமையான காற்று வீசும் என்றும், கடலின் அலைகள் சுமார் ஒன்றரை மீட்டர் உயரம்வரை எழும்பும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடையாளமாக மசூலிப்பட்டினம் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. புயல் தாக்குதலிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றும் வகையில், ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

எனினும், ஹெலன் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் செஞ்சி, சின்னசேலம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்