முக்கிய செய்திகள்:
மத்திய அரசின் வருமானவரித்துறை வழங்கிய வரிச்சலுகைகளை, டாடா நிறுவனத்தின் அறக்கட்டளைகள் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை குற்றச்சாட்டு

மத்திய அரசின் வருமானவரித்துறை வழங்கிய வரிச்சலுகைகளை, டாடா நிறுவனத்தின் அறக்கட்டளைகள் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் நாட்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறை கண்டறிந்துள்ளது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில கிரிக்கெட் வாரியங்களும் வருமானவரிச் சலுகையை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கைத்துறை, நாடு முழுவதும் செயல்படும், பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் அறக்கட்டளைகளில், தணிக்கைச் சட்டத்திற்கு உட்பட்ட 80 ஆயிரம் நிறுவனங்களின் 2013-2014-ம் ஆண்டிற்கான செலவினங்களை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தலைவர் திரு. எஸ்.கே. சர்மா, அறக்கட்டளைகள் என்பதற்காக மத்திய அரசின் வருமானவரித்துறை வழங்கிய வரிச்சலுகைகளை, டாடா நிறுவனத்தின் 2 அறக்கட்டளைகள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளைக்கென ஒதுக்கப்பட்ட பணத்தை அறச்செயல்களுக்கு செலவிடாமல், டாடா நிறுவனங்கள், வரிச்சலுகைக்கு உட்படாத பிற நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வருமானவரித்துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரு எஸ்.கே. சர்மா தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா, சவுராஷ்டிரா, பரோடா, கேரள மாநில கிரிக்கெட் வாரியங்கள், வருமானவரிக்கு உட்பட்ட ஒளிபரப்பு உரிமையினால் கிடைத்த பணத்தை, அறக்கட்டளை என்ற இனத்தின்கீழ் ஒதுக்கி 38 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிவிலக்கு பெற்றிருப்பதாகவும் திரு. எஸ்.கே. சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதித்துறை அமைச்சகம், அரசின் வருமானவரிச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் தமது தவறான செயல்பாடுகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது உண்மைதான் என ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்