முக்கிய செய்திகள்:
பாலியல் புகாருக்கு உள்ளான டெஹல்கா நாளிதழ் நிறுவனரும், ஆசிரியருமான தருண் தேஜ்பால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

பாலியல் புகாருக்கு உள்ளான டெஹல்கா நாளிதழ் நிறுவனரும், ஆசிரியருமான தருண் தேஜ்பால், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்ற தருண் தேஜ்பால், சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. சம்பவம் குறித்து டெஹல்கா நிர்வாகத்துக்கு, பாதிக்கப்பட்ட பெண் இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ஆசிரியர் தருண் தேஜ்பால், திரைப்பட விழாவின்போது தனக்கு 2 முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுபற்றி சக ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். பாலியல் புகார் குறித்து விசாரிக்க பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அப்பெண் கூறியிருந்தார். தருண் தேஜ்பால் தன்னிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தவறான புகாரை தன்மீது கூறியிருந்த போதிலும், இச்சம்பவத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தருண் தேஜ்பால் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடிந்து உண்மை நிரூபிக்கப்படும் வரை, 6 மாத காலத்திற்கு, ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தருண் தேஜ்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்