முக்கிய செய்திகள்:
ஹெலிகாப்டர்கள் வாங்கும் விவகாரத்தில் இத்தாலிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள முடிவுக்கு விமானப்படையின் தலைமைத் தளபதி வரவேற்பு

இத்தாலிய நிறுவனத்திடமிருந்து முக்கிய பிரமுகர்களின் தேவைகளுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கும் விவகாரத்தில், பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள முடிவு வரவேற்கத்தக்கது என விமானப்படையின் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களின் தேவைக்காக, இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்து இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 3,727 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஹெலிகாப்டர் பேரத்தில் 360 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹெலிகாப்டர் பேர விவகாரம் தொடர்பாக, உண்மை நிலையை கண்டறிய விளக்கம் அளிக்குமாறு கோரி, மத்திய பாதுகாப்புத் துறை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அனுப்ப, வரும் 26-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் முன்னணி பொறுப்பு வகிப்பவர்கள், மத்திய பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலரை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இதனிடையே, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மீறியதாக கூறி, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த முடிவை வரவேற்பதாக இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி ப்ரோனே தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே, பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ள ஹெலிகாப்டர் பேர ஊழலில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்