முக்கிய செய்திகள்:
பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்திற்குள் பெண் ஒருவர் தாக்கப்படும் கொடூர சம்பவம் : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் ஒருவர், மர்ம நபரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், கண்காணிப்பு கேமிராவில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் என்.ஆர். சர்கிள் பகுதியில் காவல்நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில், பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக நேற்று உள்ளே சென்றார். அப்போது, சூட்கேசுடன் பின்தொடர்ந்த மர்மநபர், உடனடியாக ஷட்டரை மூடிவிட்டு அந்த பெண்ணை மிரட்டி, அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயங்களுடன் அந்த பெண் சரிந்து விழுந்தார். பின்னர், அவரின் பையில் இருந்த பொருள் ஒன்றை எடுத்துக்கொண்ட மர்ம நபர், ஷட்டரை மூடிவிட்டு வெளியேறினார். கண்காணிப்பு கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் அனைத்தும், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

3 மணிநேரத்திற்கு பிறகு, ஷட்டரின் வழியே வெளியேறிக்கிடந்த ரத்தத்தை பார்த்த பள்ளி சிறுமிகள் இருவர், அலறியதை அடுத்து, ஷட்டர் திறக்கப்பட்டு, தாக்குதலுக்குள்ளான பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர், அபாய கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் பெயர், ஜோதி உதய் என்றும் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் நடத்திய நபர் குறித்து, விசாரணை நடத்தி வருவதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்